Wednesday, May 18, 2011

இப்ப ஏண்டா ஒட்டு போட்டோம்னு தோணுதா


இதன் மூலம் தமிழக மக்களுக்கு அறிவிப்பது என்னவெனில் தமிழகத்தில் கீழ்க்கண்ட பொருட்கள் தடை செய்யப்பட உள்ளன....
ஆட்டு இறைச்சி, ஆட்டுக்கால் சூப், ஆட்டு தோல், வயலுக்கு தெளிக்கும் ஆட்டு உரம், மிக்சி மற்றும் அதன் உதிரி பாகங்கள், மடிக்கணினி மற்றும் அதன் உதிரி பாகங்கள், அரிசி, அரிசி மாவு, கதர் வேஷ்டி, கதர் துண்டு, மற்றும் தமிழக அரசினால் அறிவிக்கப்பட்ட இலவசங்கள் அனைத்தும் அல்லது அதனை சார்ந்துள்ள அனைத்தும் இதில் அடங்கும்
மேற்கூறிய அனைத்தும் தமிழக அரசினால் விற்பனைக்கு தடை செயப்பட்டுள்ளது... இனி நாள் முதற்கொண்டு மேற்குறிய அணைத்து பொருள்களையும் யாரேனும் விற்ககூடாது.... உங்களுக்கு தேவை என்றால் JJ என்ற முத்திரை பதித்த கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும்...
இலவசமா தருகின்றோம் என்று சொன்னபோது இனிச்சது தானே.... கொய்யால இதை நீ விக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்

சும்மா ஒரு கற்பனை

Wednesday, May 11, 2011

பி.இ. கட்-ஆஃப்: 2 மதிப்பெண் அதிகரிக்கும்


பி.இ. கட்-ஆஃப்: 2 மதிப்பெண் அதிகரிக்கும்

First Published : 11 May 2011 12:32:00 AM IST


சென்னை, மே 10: இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.5 முதல் 2 மதிப்பெண் வரை அதிகரிக்கும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.
 அவர் மேலும் கூறியதாவது: பிளஸ்-2 தேர்வில் இந்த ஆண்டு கணிதத்தில் 2,720 பேரும், இயற்பியலில் 646 பேரும், வேதியலில் 1243 பேரும் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
 பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ஐ இந்த ஆண்டு 120 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
 கட்-ஆஃப் மதிப்பெண்
 199-க்கு மேல் 1174 மாணவர்களும், 198-க்கு மேல் 2717 மாணவர்களும், 197-க்கு மேல் 4,294 மாணவர்களும், 196-க்கு மேல் 5881 மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர். இதனால் கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.5 முதல் 2 வரை அதிகரிக்கும்.
 மே 16 முதல் விண்ணப்பம்:
 சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்பட தமிழகம் முழுவதும் 62 மையங்களில் பி.இ. படிப்பில் சேர விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்றும் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.

சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கட்-ஆஃப் என்ன?


சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு கட்-ஆஃப் என்ன?

First Published : 11 May 2011 12:33:11 AM IST

சென்னை, மே 10: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடமாவது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மாணர்களிடையே எழுந்துள்ளது.
 பிளஸ் 2 தேர்வில் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகிய முக்கியப் பாடங்களில் 65 மாணவர்கள் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் 200-க்கு 200 வாங்கியுள்ளனர். 200-க்கு 199.75 கட்-ஆஃப் மதிப்பெண்ணில் தொடங்கி, ஒவ்வொரு 0.25 கட்-ஆஃப் மதிப்பெண்ணுக்கும் இடையே 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெற்றுள்ளதால் கடும் கட்-ஆஃப் போட்டி ஏற்பட்டுள்ளது. அதாவது, கட்-ஆஃப் மதிப்பெண் 200-க்கு 200-ல் தொடங்கி 199.25-க்குள் 822 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
 விளைவு என்ன? இதனால் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்க உள்ள பொதுப் பிரிவு மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் 199.25-ஆக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மாநில ஒதுக்கீட்டுக்கு உரிய மொத்தம் 1,653 எம்.பி.பி.எஸ். இடங்களில், அனைத்துப் பிரிவு (ஓ.சி.) மாணவர்களுக்கு உரிய எம்.பி.பி.எஸ். இடங்கள் 512. கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 பெற்றுள்ள 371 மாணவர்களில், 61 பேருக்கு மட்டுமே முதல் கட்ட கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது; கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 பெற்றுள்ள 310 மாணவர்களுக்கு, அவர்களது வகுப்புவாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 வாங்கியுள்ளோருக்கு சிறந்த மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
 சென்னை மருத்துவக் கல்லூரிகள் கிடைக்குமா? எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 200-க்கு 200, 200-க்கு 199.75, 200-க்கு 199.50, 200-க்கு 199.25 என அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் அனைவருமே சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் சேரவே விரும்புகின்றனர். இந்த ஆண்டு கடும் கட்-ஆஃப் போட்டி காரணமாக கட்-ஆஃப் மதிப்பெண் 199.25 இருந்தாலும்கூட, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் பல மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள்: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களில் சுமார் 39 சதவீதம் பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்த 18,131 மாணவர்களில், 7,088 பேர் (39 சதவீதம்) பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் 197.50-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 எட்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்: இதைத் தொடர்ந்து சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கும் போட்டி அதிகரித்துள்ளது. இதனால் சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இட கட்-ஆஃப் மதிப்பெண் குறித்து மாணவர்களும் பெற்றோரும் கவலைப்படத் தொடங்கியுள்ளனர். சென்னை திருவேற்காட்டில் ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, சென்னை வண்டலூர் அருகே தாகூர் மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, மதுராந்தகம் அருகே ஸ்ரீ கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, ஈரோடு மாவட்டம் ஐ.ஆர்.டி. பெருந்துறை மருத்துவக் கல்லூரி, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் குலசகேரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி, திருச்சி அருகே உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி (சென்னை) ஆகிய 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 674 (65 சதவீதம்) எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வின்போதே சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரப்பப்படும் என மருத்துவக் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
 சுயநிதி கட்-ஆஃப் என்ன? அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் போன்று, சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் கடந்த ஆண்டைவிட 2 மதிப்பெண் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
 இந்த ஆண்டு சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு வகுப்புவாரியாக உத்தேச கட்-ஆஃப் மதிப்பெண் விவரம்: ஓ.சி. (அனைத்துப் பிரிவினர்)-196.25; பி.சி. (பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்)-195; பி.சி. (முஸ்லிம்)-194; மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.)-192.50; தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.)-185.00; தாழ்த்தப்பட்ட (அருந்ததி வகுப்பினர்)-175.50; பழங்குடி வகுப்பினர்-153.25.
 கட்டணம் எவ்வளவு? அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.10,495-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு நீதிபதி குழு கடந்த ஆண்டு நிர்ணயித்த ஆண்டுக் கட்டண விவரம்:
 1. பி.எஸ்.ஜி., கோவை, மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி, ஐஆர்டி பெருந்துறை மருத்துவக் கல்லூரிகள்-ரூ.2.5 லட்சம்; 2. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி-ரூ.2.3 லட்சம்; 3. ஸ்ரீ கற்பக விநாயகா, தாகூர், ஸ்ரீ முத்துக்குமரன், திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரிகள்-ரூ.2.25 லட்சம். இந்த ஆண்டும் தொடர்ந்து நீதிபதி குழு சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும்.